கோயிலின் பல தூண்களில் இடம் பெற்றிருக்கும் சிற்பம் இரண்ய வதம்.
- மனிதர்கள், மிருகங்கள், தேவர்களாலோ,
- பகலிலோ, இரவிலோ,
- விண்ணிலோ, மண்ணிலோ,
- இருப்பிடத்தின் உள்ளேயோ, வெளியேயோ;
- ஆயுதங்களாலோ;
மரணமில்லா வரத்தைக் கடும் தவமியற்றிப் பெற்றவன் இரண்ய கசிபு. தன் தம்பி இரண்யாட்சனைக் வராகமாகிக் கொன்ற திருமாலிடம் தீராப் பகை கொண்டவன். தன் ஆற்றலால் மூவுலகையும் ஆண்டவன். அவன் மகன் பிரகலாதனோ எதிரியிடம் பக்தி பூண்டு "ஹரி, ஹரி" என மனம், வாக்கு, மெய்யால் தொழுது நின்றான். அவன் மனதை அறிவுரை, தண்டனை எதனாலும் மாற்ற இயலாமல் போனது அறிந்த இரண்யன், 'எங்கே உன் ஹரி' என்று கொந்தளிக்க, தூணிலிருந்து வெளிப்பட்டது நரசிம்மம். இரண்யன் பெற்ற வரங்களை மீறாமல் இரவும் பகலும் அற்ற செவ்வந்திப் பொழுதில், இருப்பிடத்தின் உள்ளோ வெளியோ இல்லாத வாயிலில், வானிலோ மண்ணிலோ இல்லாமல் தன் தொடை மீது இருத்தி, ஆழியோ, அம்போ, கதையோ, வேறு ஆயுதமோ இல்லாமல் இரண்யனின் வயிற்றைத் தன் நகங்களால் கிழித்து, அவன் கதையை கொடூரமாக முடித்தது மனிதனோ, மிருகமோ, தேவனோ அல்லாத நரசிம்மம்.
இந்தப் புராணக் கதையின் அழகிய, நுண்ணிய வேலைப்பாடுள்ள புடைப்புச் சிற்பமொன்று பிரம்ம தீர்த்தக் கரையிலுள்ள நாலு கால் மண்டபத்தில் உள்ளது.
![]() |
| பிர்ம்ம தீர்த்த மண்டபம் |
நடராஜரைப் போல வலது காலை மடித்து நிலத்தில் ஊன்றி, இடது காலை மடித்து தூக்கி உள்ளார் நரசிம்மர். இரண்யன் அவர் மடி மீது செயலிழந்து கிடக்கிறான். வாளை ஏந்திய வலக்கை நரசிம்மரின் ஒரு இடது கரத்தால் தடுக்கப்பட்டும், கேடயத்தை ஏந்திய இடக்கை நரசிம்மரின் இடது காலால் இறுக்கப்பட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இடது தொடை மீது மகுடத்தை ஒரு கை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வலது தொடை மீது உள்ள இரண்யனின் வலது தொடையை நரசிம்மரின் வலது கை நகங்களால் கிழித்து கை உள் நுழைந்து பற்றியிருக்கிறது. இரண்யனது இடதுகால் கிழே தொங்கிக்கொண்டிருக்கிறது. முன்னிரு கரங்கள் கூர் உகிர்களால் வயிற்றைக் கிழிக்கின்றன. இன்னொரு வலக்கரத்தில் ஆழியும், இடக்கரத்தில் சங்கும். மேல் வலது கரம் கட்டை விரல் விரிந்திருக்க அறையப்போவது போல உள்ளது - தாடன ஹஸ்தம் - தண்டனையைக் குறிப்பது. மேல் இடது கரம் எல்லா விரல்களும் விரிந்து பின் நோக்கித் திரும்பியுள்ளது - விஸ்மயா ஹஸ்தம் - வியப்பைக் குறிப்பது. கண்களில் கோபத்தோடு இரண்யனை பார்த்தவாறு உள்ளார். பின்னணியில் அரண்மனை வாயில். இருவரது அணிகளும், ஆயுதங்களும், ஆடைகளும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஊன்றிய வலது திருவடியும், தூக்கிய இடது திருவடியும், எட்டு கரங்களும், உடல் வளைவுகளுமாக நரசிம்மர் நிகழ்த்தும் போர் நடனம்.
தொடர் காட்சிகள்
இரண்ய வதத்தைத் தொடர் காட்சிகளாக திட்டிவாசல் மண்டப வடபுறத் தூண்களில் காணலாம்.
காட்சி 1: நரசிம்மர் தூணிலிருந்து வெளி வருகிறார். நான்கு கரங்கள். கீழிரு கரங்கள் தொங்கிக் கொண்டிருக்க, வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல் கரத்தில் சங்கும்.
![]() |
| திட்டி வாசல் மண்டபம் |
காட்சி 2: இரண்யனின் கிரீடத்தையும் தோளையும் பிடித்து இழுக்கிறார். இரண்யனின் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும்.
![]() |
| திட்டி வாசல் மண்டபம் |
காட்சி 3: ஆறு கரங்களை உடைய நரசிம்மர் மூன்று கைகளால் இரண்யனை அள்ளி தூக்குகிறார்.
![]() |
| திட்டி வாசல் மண்டபம் |
காட்சி 4: இரண்யனின் வயிற்றை கிழித்து, குடலை உருவி வதம் செய்கிறார். இக்கட்டுரையின் முதலில் கண்ட இரண்ய வதக் காட்சிக்கும், இதற்கும் உள்ள வேறுபாடுகளைக் காணவும். மேலிரு கரங்கள் தாடன, விஸ்மயா ஹஸ்தங்களாக இல்லாமல் கிழிந்த வயிற்றிலிருந்து குடலை வெளியெடுத்து மாலை சூடப்போவது போன்று ஏந்தி உயர்ந்து நிற்கின்றன. உடல், வளைவுகள் இல்லாமல் நேராக நிமிர்ந்துள்ளது.
![]() |
| திட்டி வாசல் மண்டபம் |
நரசிம்மரை தூய தமிழில் 'ஆளரி'' (ஆள் - மனிதன், நரன் + அரி - சிங்கம், சிம்மம்) என்று பாடியுள்ளனர் பெரியாழ்வாரும் ('அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையுமானவனே'} பிறரும்.
"அந்தியம் போதில் அரியுரு வாகி
அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டென்று பாடுதுமே"
(முதல் அரி - சிம்மம்; இரண்டாம் அரி - எதிரி, இரண்யன்; பந்தனை - களைப்பு)
- பெரியாழ்வார், நாலாயிர திவ்விய பிரபந்தம் 0006
காட்சி 5: இரண்ய வதத்திற்குப் பிறகு ஆவேசம் அடங்காத நரசிம்மர் எவ்வாறு அமைதி அடைகிறார்? இரண்டு விதமான காட்சிகள்.
காட்சி 5அ: பக்த பிரகலாதன் ஹரியை துதிக்க அவர் மனம் குளிர்ந்து அமைதி அடைகிறார்.
![]() |
| திட்டிவாசல் மண்டபம் |
காட்சி 5ஆ: இரண்ய வதத்தின்போது தெரித்த அசுர ரத்தம் தன் மேனியில் பட்டதால் ஆவேசம் தணியாத நரசிம்மரைக் கண்டு பயந்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டனராம். சிவன் யாழி முகம், மேலே மனிதன் கீழே சிங்கம் ஆன உடல், 8 கால்கள், நான்கு கைகள், 2 இறக்கைகளுடன் சரபம் என்னும் பறவை உரு எடுத்தார். சரபம் நரசிம்மரை அள்ளிக்கொண்டு விண்ணில் மேலே பறந்து அசுர ரத்தத்தை வெளியேற்றியது. நரசிம்மர் அமைதி அடைந்தார். இக்காட்சியின் தூண் சிற்பங்கள் திட்டிவாசல், வளைகாப்பு மண்டபம் போன்ற இடங்களில் இருந்தாலும் மிக அழகிய தெளிவான சிற்பம் பிரம்ம தீர்த்த மண்டபத்தின் வடமேற்கு தூணின் மேல் பக்கம் மேற்கு கோக்கி உள்ளது.
சரபம் நரசிம்மரைத் தூக்கி பறந்து சென்று கொண்டிருக்கிறது. நரசிம்மர் இரு கைகளின் சங்கும் சக்கரமும் ஏந்தி மற்ற இரு கைகளை தலைக்குமேல் கூப்பியபடி தொங்கியவாறு உள்ளார். சற்று வேறொரு கோணத்தில் அமைந்த சரப நரசிம்ம சிலை திட்டிவாசல் மண்டபத்தில் உள்ளது.
![]() |
| திட்டிவாசல் மண்டபம் |
காட்சி 6: அமைதி அடைந்த நரசிம்மர் யோகநரசிம்மராய் அருள் பாலிக்கிறார். ஆயிரம் கால் மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தியின் பின்னால் உள்ள 4 கால் உருத்திராட்ச மண்டபத்தின் தூணில்.
![]() |
| உருத்திராட்ச மண்டபம் |
நரசிம்மர் அமர்ந்திருக்கும் நிலை 'யோகாசனம்'. இரு கால்களையும் கட்டியிருப்பது யோக பட்டம்.









*ஆளரியின் போர் நடனம்*
பதிலளிநீக்குகட்டுரையில்
மரணமில்லா வரத்தைக்
கடும் தவமிருந்துப் பெற்ற
இரண்ய கசிபுவை
நரசிம்மர் வதம் செய்யும்
சிற்பங்கள் அனைத்தும்
கதைச் சொல்லிகளாக
இருப்பது சிறப்பு..!
அனைத்துச் சிற்பங்களையும்
காட்சிப்படுத்திய விதம்
அருமை..!