திங்கள், 24 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் 3: சுரம் நீக்கும் பரமன்

ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று. அரிதாகவே காணப்படும் இந்த மூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையின் நான்கு தூண்களில் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் வடக்கு (1000 கால் மண்டபத்தை) நோக்கியுள்ளது. 

சுரம் நீக்கும் பரமன் (ஜ்வரபக்ன மூர்த்தி): வளைகாப்பு மண்டபம்

தூக்கிய இடது திருவடி, வீசிய முன் இடது கை, தழல் ஏந்திய இடது பின்கை இவற்றால் முதலில் நடராஜர் திருவடிவம் போலத் தோன்றினாலும் இந்த திருவடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் உடையது. 

ஜ்வரபக்ன மூர்த்தியை வழிபட்டால் சுரம் தீரும் என்று நம்பப்படுகிறது. இந்தத் திருவடிவம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகப்பட்டினம் அருகிலுள்ள சாட்டியாங்குடி, ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேசுவரர் கோயில், திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே காணப்பெறுவது என்று திரு இரா. இராமகிருட்டினன் தனது 'அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 


இத்திருவடிவத்தின் பின் உள்ள புராணக்கதை என்ன? மகாபாரத காலத்தில் வாழ்ந்தவன் ஆயிரம் கைகளுடைய வாணாசுரன். திருமாலின் ஐந்தாம் அவதாரமாகிய வாமனருக்கு மூன்று அடி மண் கொடுத்த மகாபலியின் மகன். சிறந்த சிவபக்தனான இவனது வேண்டுதலுக்கு சிவன் இணங்கி , பார்வதி, கணேசர், முருகரோடு அவன் அரண்மனையில் தங்கி இருந்தார். தன் மகள் உஷை கண்ணனின் மகன் அநிருத்தனை காதலிப்பது அறிந்த வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வந்த கண்ணன் முதலில் அங்கிருந்த சிவனுடன் போரிட வேண்டியதாயிற்று. கண்ணனுடன் களிப்போர் புரிந்த சிவன் பின்பு விலகி வழிவிட கண்ணன் வாணாசுரனின் 998 கைகளை வெட்டி வெற்றிகொண்டான். அநிருத்தன் உஷையை மணந்தான். சிவனருளால் வாணாசுரன் இழந்த கைகளைத் திரும்பப் பெற்றான். சிவனுக்கும் கண்ணனுக்கும் இடையேயானப் போரின்போது கண்ணன் சிவன்மீது குளிர் சுரத்தை ஏவினான். வெம்மை சுரத்தை ஏவி சிவன் அதை முறியடித்தான். அதுவே ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் திருவடிவம்.


துணைநூல்கள், சுட்டிகள்:

  1. அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' - இரா. இராமகிருட்டினன்; நர்மதா பதிப்பகம்; 2016
  2. தமிழ் விக்கிப்பீடியா - சுரம் நீக்கும் பரமன்
  3. தினமலர் கோயில்கள் - சிவவடிவங்கள் ஜ்வரபக்ன மூர்த்தி



ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்புமிக்க கொற்றவை (துர்க்கை) சிற்பங்கள் ராஜகோபுரத்தை அடுத்து உள்ள வளைகாப்பு மண்டபத்தில் அமைந்துள்ளன. 

மகிஷனுடன் போருக்கு எழும் கொற்றவை

தென்மேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வால் தூக்கி, விரைந்து நடக்கும் சிங்கத்தின் மேல் அமர்ந்து கைகளில் சங்கும், சக்கரமும். கேடயமும், ஓங்கிய வாளுமாக போருக்கெழும் துர்க்கை. 


வளைகாப்பு மண்டபம்

மகிஷனுடன் போரிடும் துர்க்கை 

வடமேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வழக்கமான தூண் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் ஏறத்தாழ தனிச்சிற்பமாகவே உள்ளது இதன் ஒரு சிறப்பு.

வளைகாப்பு மண்டபம்

வளைகாப்பு மண்டபம்

யானை ஒன்றின் தலையை துர்க்கையின் வாகனமாகிய சிம்மம் முன்னிரு கால்களாலும், அதன் முதுகை இடது பின்னங்காலாலும்  பிடித்திருக்கிறது. சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள துர்க்கை பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளாள். முன் இடது கை வில்லைப் பிடித்திருக்க, முன் வலது கை பின் நோக்கி வளைந்து அம்பராத்தூணியிலிந்து அம்பை எடுக்கிறது. 

சிங்கம் மீதமர்ந்து வில்லேந்தி அம்பெடுக்கும் கொற்றவையின் உடல் அமைதி மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை சுவர் சிற்பத்தின் துர்க்கையின் உடல் அமைதியைத் தழுவியுள்ளது. 

மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை 

அதில் துர்க்கைகு எட்டு கைகள், கணங்களும் அசுரர்களுமான போர்க்கள காட்சி என மற்ற விவரங்கள் வேறுபட்டாலும், துர்க்கையின் அடிப்படை உடல் அமைதி இரு சிற்பங்களிலும் ஒன்றே. சமகால படைப்புகளில் உருவ அமைதி ஒத்திருப்பது வழக்கம்தான். மாமல்லை சிற்பம் 7 ஆம் நூற்றாண்டில் உருவானது, திருவண்ணாமலை திருக்கோயில் சிற்பமோ ஒன்பது நூற்றாண்டுகள் பிந்தையது  என்னும்போது இந்த ஒற்றுமை வியப்புக்குறியது. பெண் தெய்வ உருவங்களை தடமுலைகளோடு அமைப்பது மரபாக இருக்கும்போது, திருவண்ணாமலை துர்க்கையின் சிறுத்த முலைகள் வியப்பை அளித்தது. பேராண்மையின் வெளிப்பாடோ? இதே மண்டபத்தில் உள்ள கீழே பதிவடப்பட்டுள்ள மற்ற இரண்டு துர்க்கை சிலைகளை ஒப்பிடும்போது இந்த வேறுபாடு தெளிவாகத் தெரியும். இதிலும் மகாபலிபுரம் துர்க்கையோடு ஒற்றுமை தெரிகிறது.

மேலும் திருவண்ணாமலை சிற்பம் யானையை பயன்படுத்தி சிங்கம், அதன்மீது அமர்ந்துள்ள துர்க்கை இருவரின் பேருருவத்தை நமக்குக் காட்டுகிறது.

'மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை' படம் - மூலம்:

https://commons.wikimedia.org/wiki/File:Mahabalipuram_Mahishasura_1.jpg#filelinks

கொற்றவையின் போர் நடனம்

தென்மேற்கு மூலைத் தூணின் தெற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். நரசிம்மம் நிகழ்த்தும் இரண்யவதத்தை ஒத்த காட்சி.

வளைகாப்பு மண்டபம்

துர்க்கையின் இடதுகால் எருமையாகிய மகிஷனின் தலையை தரையோடு அழுத்தியுள்ளது. மற்றோரு கால் அவன் முதுகின்மேல். ஒரு கை எருமையின் வாலைபற்றி இழுக்க, வலது கை ஒன்றில் ஏந்திய குறு வாள் எருமையை குத்தி வெளிவருகிறது. இரு கைகளால் ஓங்கிய திரிசூலம் எருமையை குத்தித் துளைத்துக்கோண்டிருக்கிறது. மற்ற 4 கரங்களில் சக்கரம், தீ, சங்கு, கேடயம்.  நடராஜரையும், நரசிம்மரையும் ஒத்த ஒரு நடன அமைதி இந்த சிற்பத்தில் வெளிப்படுகிறது.

அவுணன்  தலைமிசை நின்ற தையல்

தீபதரிசன மண்டபத்தில் உள்ள தூண் சிற்பம் இது.


தீபதரிசன மண்டபம்

போர்வெறி தணிந்து மகிஷன் தலை மீது நின்று பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி, முன் இடது கையை தொடையில் ஊரு ஹஸ்தமாய் ஊன்றி, வலது கையை அபய ஹஸ்தமாய் காட்டி அருள் புரியும் அன்னை. சக்கரமும், சங்கும் வழக்கமான இடம் மாறி இருக்கின்றன.

"இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்"         - சிலப்பதிகாரம் 

(எருமைத் தலையும் மனித உடலும் ஆக இரண்டு வேறு உருவங்களின் கலவையான, திரண்ட தோள்களை உடைய அசுரன்  (அவுணன்) மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நின்ற பெண்)

அருள்பாலிக்கும் அன்னை

அசுரனை ஒழிந்து தன் சிங்க வாகனம் பின்னே நிற்க வலது முன்கரத்தில் அபய ஹஸ்தம் காட்டி அருள் பாலிக்கும் எண்கை துர்க்கை அன்னை.

வளைகாப்பு மண்டபம்

திட்டி வாசல் தூண்களில் துர்க்கை

ஒன்று போலத் தோன்றினாலும் சிறு வேறுபாடுகள் உள்ளன. 








காண்க:

சனி, 22 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் - 1: அறிமுகம்

ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஐந்தாம் திருச்சுற்றில் இடதுபுறம் கம்பத்திளையனார் சந்நிதி. அதன் பின்னால் சிவகங்கை திருக்குளத்தின் வடக்கே இருக்கும் 16 கால் மண்டபம்தான் வளைகாப்பு மண்டபம்.


வளைகாப்பு மண்டபம்

இது திருக்கோயிலில் உள்ள எழிலார்ந்த மண்டபங்களில் ஒன்று. ஆடி மாதம் நிகழும் பத்துநாள் பராசக்தி உற்சவத்தின் இறுதி நாளான ஆடிப்பூரத்தினன்று இந்த மண்டபத்தில்தான் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும்.

தற்போது மண்டபம் இரும்பு வேலியால் மூடப்பட்டு நுழைவு வாயில் மேற்கு நோக்கி உள்ளது. அங்கு உள்ள நான்கு கற்படிகள் பிற்கால இணைப்புகளாகத் தோன்றுகின்றன. வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிலைகள் தெற்கே உள்ளன. எனவே இந்த மண்டபம் தெற்கே சிவகங்கை திருக்குளத்தை நோக்கி அமைக்கப்பட்டது என்று கருதலாம்.

1. சதுரமான அதிஷ்டானம் எனப்படும் தாங்குதள மேடை. 



தாங்குதளத்தின் 'கண்டம்' என்னும் கழுத்துப் பகுதியில் சிற்ப வரிசை இருப்பதைக் காணலாம், 

2. அதன் மீது வெளிச் சுற்றில் 12 தூண்கள்.   

3.பிரஸ்தரம் எனப்படும் மண்டபக்கூரை. அதன் வெளிப்புறம் கூரையின் ஓரத்தில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டுள்ள வளைந்த அமைப்பு (1) கபோதம் எனப்படும். அதன் மீது கொடிக் கருக்கு அலங்காரங்கள் உள்ளதை காண்க. கபோதத்தின் மீது உள்ளது யாளி வரி (2). அதில் யாளிகளும் சிங்கங்களும் வரிசையாய் செதுக்கப் பட்டுள்ளதைக் காண்க. தூண்கள் மீது அமர்ந்து கூரைப்பலகைகளைத் தாங்கும் உத்தரங்களும் வெறுமையாக இல்லாமல் இலைக்கருக்கு அணியால் அழகு செய்யப்பட்டிருப்பதைக் காண்க.



மண்டபத்தின் நடுவே சதுரமான கொலுமேடை. தாங்குதளம், அதன் 4 மூலைகளிலும் 4 தூண்கள், கூரை



மேடை மீதுள்ள கூரைப்பகுதி சுற்றியுள்ள கூரையைவிட உயர்ந்துள்ளது. அதன் நடுவில் பூ அலங்காரச் சிற்பம். சுற்றி இரும்பு வளையங்கள்.



வளைகாப்பு மண்டபத்தின் 16 தூண்களும் அழகிய சிற்பங்களால் அணிசெய்யப் பெற்றவை.

வளைகாப்பு மண்டபத்தினுள்  தெய்வச் சந்நிதி இல்லை. இருந்தாலும் மண்டபங்களுக்கு உரித்தான மேற்கண்ட மூன்று உறுப்புகளுடன் கூட, தெய்வச் சந்நிதிகளுக்கே உரித்தான விமானம் இந்த மண்டபத்தின் மீது அமைந்திருப்பது ஏன்?

அருணகிரிநாதருக்கும் சம்பந்தாண்டாருக்கும் இடையே பிரபுட தேவராயன் அவையில் ஏற்பட்ட வாதத்தில் முன்னவரின் அழைப்பை ஏற்று முருகர் வளைகாப்பு மண்டபத்தின் வடகிழக்கு மூலைத் தூணில்தான் காட்சி அளித்தார். இந்நிகழ்வின் அடையாளமாக அத்தூணில் உள்ள முருகரின் புடைப்புச் சிற்பம்தான் கம்பத்திளையனாராக வழிபடப் படுகிறது. அதன் காரணமாகவே இந்த மண்டபத்தின் மீது விமானம் அமைந்துள்ளது.










செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஆளரியின் போர் நடனம்

கோயிலின் பல தூண்களில் இடம் பெற்றிருக்கும் சிற்பம் இரண்ய வதம். 

  • மனிதர்கள், மிருகங்கள், தேவர்களாலோ,
  • பகலிலோ, இரவிலோ,
  • விண்ணிலோ, மண்ணிலோ,
  • இருப்பிடத்தின் உள்ளேயோ, வெளியேயோ;
  • ஆயுதங்களாலோ;
மரணமில்லா வரத்தைக் கடும் தவமியற்றிப் பெற்றவன் இரண்ய கசிபு. தன் தம்பி இரண்யாட்சனைக் வராகமாகிக் கொன்ற திருமாலிடம் தீராப் பகை கொண்டவன். தன் ஆற்றலால் மூவுலகையும் ஆண்டவன். அவன் மகன் பிரகலாதனோ எதிரியிடம் பக்தி பூண்டு "ஹரி, ஹரி" என மனம், வாக்கு, மெய்யால் தொழுது நின்றான். அவன் மனதை அறிவுரை, தண்டனை எதனாலும் மாற்ற இயலாமல் போனது அறிந்த இரண்யன், 'எங்கே உன் ஹரி' என்று கொந்தளிக்க, தூணிலிருந்து வெளிப்பட்டது நரசிம்மம். இரண்யன் பெற்ற வரங்களை மீறாமல் இரவும் பகலும் அற்ற செவ்வந்திப் பொழுதில், இருப்பிடத்தின் உள்ளோ வெளியோ இல்லாத வாயிலில், வானிலோ மண்ணிலோ இல்லாமல் தன் தொடை மீது இருத்தி, ஆழியோ, அம்போ, கதையோ, வேறு ஆயுதமோ இல்லாமல் இரண்யனின் வயிற்றைத் தன் நகங்களால் கிழித்து, அவன் கதையை கொடூரமாக முடித்தது மனிதனோ, மிருகமோ, தேவனோ அல்லாத நரசிம்மம்.

இந்தப் புராணக் கதையின் அழகிய, நுண்ணிய வேலைப்பாடுள்ள புடைப்புச் சிற்பமொன்று பிரம்ம தீர்த்தக் கரையிலுள்ள நாலு கால் மண்டபத்தில் உள்ளது.

பிர்ம்ம தீர்த்த மண்டபம்

நடராஜரைப் போல வலது காலை மடித்து நிலத்தில் ஊன்றி, இடது காலை மடித்து தூக்கி உள்ளார் நரசிம்மர். இரண்யன் அவர் மடி மீது செயலிழந்து கிடக்கிறான். வாளை ஏந்திய வலக்கை நரசிம்மரின் ஒரு இடது கரத்தால் தடுக்கப்பட்டும், கேடயத்தை ஏந்திய இடக்கை நரசிம்மரின் இடது காலால் இறுக்கப்பட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இடது தொடை மீது மகுடத்தை ஒரு கை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வலது தொடை மீது உள்ள இரண்யனின் வலது தொடையை நரசிம்மரின் வலது கை நகங்களால் கிழித்து கை உள் நுழைந்து பற்றியிருக்கிறது. இரண்யனது இடதுகால் கிழே தொங்கிக்கொண்டிருக்கிறது. முன்னிரு கரங்கள் கூர் உகிர்களால் வயிற்றைக் கிழிக்கின்றன. இன்னொரு வலக்கரத்தில் ஆழியும், இடக்கரத்தில் சங்கும். மேல் வலது கரம் கட்டை விரல் விரிந்திருக்க அறையப்போவது போல உள்ளது - தாடன ஹஸ்தம் - தண்டனையைக் குறிப்பது. மேல் இடது கரம் எல்லா விரல்களும் விரிந்து பின் நோக்கித் திரும்பியுள்ளது - விஸ்மயா ஹஸ்தம் - வியப்பைக் குறிப்பது. கண்களில் கோபத்தோடு இரண்யனை பார்த்தவாறு உள்ளார். பின்னணியில் அரண்மனை வாயில். இருவரது அணிகளும், ஆயுதங்களும், ஆடைகளும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஊன்றிய வலது திருவடியும், தூக்கிய இடது திருவடியும், எட்டு கரங்களும், உடல் வளைவுகளுமாக நரசிம்மர் நிகழ்த்தும் போர் நடனம்.


தொடர் காட்சிகள்


இரண்ய வதத்தைத் தொடர் காட்சிகளாக திட்டிவாசல் மண்டப வடபுறத் தூண்களில் காணலாம்.

காட்சி 1: நரசிம்மர் தூணிலிருந்து வெளி வருகிறார். நான்கு கரங்கள். கீழிரு கரங்கள் தொங்கிக் கொண்டிருக்க, வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல் கரத்தில் சங்கும்.

திட்டி வாசல் மண்டபம்

காட்சி 2: இரண்யனின் கிரீடத்தையும் தோளையும் பிடித்து இழுக்கிறார். இரண்யனின் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும்.

திட்டி வாசல் மண்டபம்

காட்சி 3: ஆறு
 கரங்களை உடைய நரசிம்மர் மூன்று கைகளால் இரண்யனை அள்ளி தூக்குகிறார்.

திட்டி வாசல் மண்டபம்


காட்சி 4: இரண்யனின் வயிற்றை கிழித்து, குடலை உருவி வதம் செய்கிறார். இக்கட்டுரையின் முதலில் கண்ட இரண்ய வதக் காட்சிக்கும், இதற்கும் உள்ள வேறுபாடுகளைக் காணவும். மேலிரு கரங்கள் தாடன, விஸ்மயா ஹஸ்தங்களாக இல்லாமல்  கிழிந்த வயிற்றிலிருந்து குடலை வெளியெடுத்து மாலை சூடப்போவது போன்று ஏந்தி உயர்ந்து நிற்கின்றன. உடல், வளைவுகள் இல்லாமல் நேராக நிமிர்ந்துள்ளது.


திட்டி வாசல் மண்டபம்


நரசிம்மரை தூய தமிழில் 'ஆளரி'' (ஆள் - மனிதன், நரன் + அரி - சிங்கம், சிம்மம்) என்று பாடியுள்ளனர் பெரியாழ்வாரும் ('அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையுமானவனே'பிறரும்.  

"அந்தியம் போதில் அரியுரு வாகி
        அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
        தாண்டென்று பாடுதுமே"

(முதல் அரி - சிம்மம்; இரண்டாம் அரி - எதிரி, இரண்யன்; பந்தனை - களைப்பு)
- பெரியாழ்வார், நாலாயிர திவ்விய பிரபந்தம் 0006


காட்சி 5: இரண்ய வதத்திற்குப் பிறகு ஆவேசம் அடங்காத நரசிம்மர் எவ்வாறு அமைதி அடைகிறார்? இரண்டு விதமான காட்சிகள்.

காட்சி 5அ: பக்த பிரகலாதன் ஹரியை துதிக்க அவர் மனம் குளிர்ந்து அமைதி அடைகிறார்.


திட்டிவாசல் மண்டபம்

காட்சி 5ஆ: இரண்ய வதத்தின்போது தெரித்த அசுர ரத்தம் தன் மேனியில் பட்டதால் ஆவேசம் தணியாத நரசிம்மரைக் கண்டு பயந்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டனராம். சிவன் யாழி முகம், மேலே மனிதன் கீழே சிங்கம் ஆன உடல், 8 கால்கள், நான்கு கைகள், 2 இறக்கைகளுடன் சரபம் என்னும் பறவை உரு எடுத்தார். சரபம் நரசிம்மரை அள்ளிக்கொண்டு விண்ணில் மேலே பறந்து அசுர ரத்தத்தை வெளியேற்றியது. நரசிம்மர் அமைதி அடைந்தார். இக்காட்சியின் தூண் சிற்பங்கள் திட்டிவாசல், வளைகாப்பு மண்டபம் போன்ற இடங்களில் இருந்தாலும் மிக அழகிய தெளிவான சிற்பம் பிரம்ம தீர்த்த மண்டபத்தின் வடமேற்கு தூணின் மேல் பக்கம் மேற்கு கோக்கி உள்ளது. 


பிரம்மதீர்த்த மண்டபம்

சரபம் நரசிம்மரைத் தூக்கி பறந்து சென்று கொண்டிருக்கிறது. நரசிம்மர் இரு கைகளின் சங்கும் சக்கரமும் ஏந்தி மற்ற இரு கைகளை தலைக்குமேல் கூப்பியபடி தொங்கியவாறு உள்ளார். சற்று வேறொரு கோணத்தில் அமைந்த சரப நரசிம்ம சிலை திட்டிவாசல் மண்டபத்தில் உள்ளது.


திட்டிவாசல் மண்டபம்
சரபேசுவர் சிவனின் 64 வடிவங்களில் ஒன்று. அவரது  தனிச்சன்னிதி திருபுவனத்தின் உள்ளது.

காட்சி 6: அமைதி அடைந்த நரசிம்மர் யோகநரசிம்மராய் அருள் பாலிக்கிறார். ஆயிரம் கால் மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தியின் பின்னால் உள்ள 4 கால் உருத்திராட்ச மண்டபத்தின் தூணில்.


உருத்திராட்ச மண்டபம்

நரசிம்மர் அமர்ந்திருக்கும் நிலை 'யோகாசனம்'. இரு கால்களையும் கட்டியிருப்பது யோக பட்டம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கோபியர் ஆடை திருடும் கண்ணன்

கோபியர் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினர். குறும்புக்காரக் கண்ணன் அந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு கரையோர மரத்தின் மீது ஏறிக்கொண்டான். ஆடை வேண்டி கோபியர் கண்ணனை நோக்கி ஓலமிட்ட காட்சி தூண் புடைப்பு சிற்பங்களுக்கு ஒரு முக்கியக் கரு. கடவுளர் திருவுருவங்களைச் செதுக்கும்போது சிற்பியின் கற்பனைத் திறனுக்கு ஆகமங்கள் கடிவாளம் இடும். இக்காட்சிக்கு அத்தகைய தடைகள் இல்லாததால் இதன் ஒவ்வொரு படைப்பும் சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

மரம், மரத்தின் மீது கண்ணன், அவன் கையில் ஆடைகள், ஆடைகளில்லா பெண்கள், அவர்கள் எண்ணிக்கை, கண்ணனிடம் ஆடை வேண்டி ஓலமிடும் வெவ்வேறு உடல் மொழி, நிலைகள் இவற்றை சிற்பிகள் தங்கள் கற்பனைக்கேற்ப ரசித்து வடித்த சிற்பங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வெவ்வேறு மண்டபங்களின் தூண்களில் உள்ளன. அவற்றின் ஒரு தொகுப்பு.

திட்டி வாசல்

பெரிய நந்திக்கு பின் உள்ள 4 கால் மண்டபம்

குதிரை மண்டபம்


தீபதரிசன மண்டபம்

தீபதரிசன மண்டபம்


கல்யாண மண்டபம்

மேற்கண்ட சிற்பங்கள் ஒரே சட்டகத்தில் அமைந்திருக்க, கல்யாண மண்டபத்தின் படிகளின் வலது புறத் தூணில் ஒரு வித்தியாசமான கற்பனை:

தூணின் கீழ் பகுதியில் யமுனையில் ஆடையின்றி நீராடிய இரு பெண்கள் கைகளை மேலே உயர்த்தியும் கூப்பியும் கண்ணனிடம் ஆடை வேண்டி மன்றாடுகின்றனர். 

கல்யாண மண்டபம்

நதியின் மேல் நீட்டியுள்ள கிளை ஒன்றின் மீது ஆடைகளோடு அமர்ந்துள்ளான் கண்ணன்.  

கல்யாண மண்டபம்

கரையும் மரமும் எங்கே? தூணினுள்! 

கல்யாண மண்டபம்

அதே தூணிலும் பக்கத்து தூணிலும் கண்ணனிடம் ஆடைளை இழந்த பெண்களின் சிற்பங்கள்!


கல்யாண மண்டபம்

கல்யாண மண்டபம்

கோபியரின் ஆடைகளைத் திருடும் கண்ணன் கதையைச் சொல்லும் சிற்பங்களுள் அபூர்வமானது இந்த படைப்பு.

சனி, 15 டிசம்பர், 2018

புருஷாமிருகம்

திருக்கார்த்திகை திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவத்தில் பிறைசூடிய பெம்மானை (சந்திரசேகரர்) சுமந்து வரும் பேறு பெற்றது, புருஷாமுனி வாகனம். மனிதன் பாதி, விலங்கு பாதி இரண்டும் சேர்ந்த கலவையாய் உருவான படிமங்களுள் ஒன்று புருஷாமிருகம் - மேல்பாதி மனிதன், கீழ் பாதி புலி.

புருஷாமிருக வாகனம்

ராஜகோபுரத்தின் வழியாக அங்கு இருக்கும் 'செல்வக் கணபதியைக் கைதொழுது' ஐந்தாம் திருசுற்றில் நுழைந்தவுடன், திரும்பி ராஜகோபுரத்தின் பின் சுவரை பாருங்கள். வாசலின் தென்புறம் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பம் ஒன்றைக் காணலாம்.

புருஷாமிருகம் ராஜகோபுரம்

கிரீடம், தாடி மீசையுடன் முனிவர் முகம். முகத்தில் புன்னகை. இரு புலிக்கால்களில் நின்று விலங்கு போல் முன்புறம் நீண்ட உடல். தூக்கிய வால். வலது கையில் தீபமும், இடது கையில் மணி ஏந்தி பூசனை செய்யும் கோலம்.

கோயிலின் பல தூண்களில், சுவர்களில் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன - திட்டிவாசல் தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், கார்த்திகை மண்டப தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், வளைகாப்பு மண்டப வடமேற்கு மூலைத் தூணின் போதிகையில்.

திட்டி வாசல் தெற்கு பக்கத் தூண்

புருஷாமிருகத்தின் கதை சொல்லும் புடைப்புச் சிற்பத்தை கம்பத்திளையனார் கோயிலின் தெற்குப் பக்க வெளிச்சுவரில் (வளைகாப்பு மண்டபம் அருகில்) காணலாம்.

புருஷாமிருகமும் பீமனும்

மேலேயுள்ள சிற்பத்தில் புருஷாமிருகம் துரத்திச்செல்வது பீமனை. நடுவில் ஒரு லிங்கம். பாண்டவர்கள் குருக்ஷேத்திரப் போரில் வென்ற பிறகு ராஜசூய யாகம் செய்தார் தர்மர். அந்த யாகத்திற்கு புருஷாமிருகத்தின் வருகை தேவைப்பட்டது.  அழைத்துவரும் பணியை பீமனிடம் ஒப்படைத்தார் தர்மர். புருஷாமிருகத்தின் ஆற்றலை அறிந்த பீமன், கண்ணனிடம் ஆலோசனை கேட்டான். அவர் 12 ருத்திராட்சங்களை அளித்தார். தன்னை யாகத்திற்கு அழைத்த பீமனிடம் தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்லவேண்டும் என்றும், தோற்றவர் வென்றவருக்கு அடிமை என்றும் நிபந்தனை போட்டது புருஷாமிருகம். சலுகையாக பீமன் 4 காத தூரம் ஓடிய பிறகே அது ஓட ஆரம்பித்தது. ஆனால், சிறிது நேரத்தில் இடைவெளி குறைந்து பீமனை நெருங்கிவிட்டது. கண்ணனின் திட்டப்படி பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட அது சிவலிங்கமாக மாறியது. பெரும் சிவபக்தராகிய புருஷாமிருகம் ஓடுவதை நிறுத்திவிட்டு சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தது. மீண்டும் ஓடத் துவங்கி பீமனை நெருங்கியது. பீமன் இன்னொரு ருத்திராட்சத்தை கீழே போட அதுவும் சிவலிங்கமாகி புருஷாமிருகம் ஓடுவதை நிறுத்திவிட்டு பூஜை செய்தது. இப்படி 12 ருத்திராட்சங்களை தரையில் வீசி புருஷாமிருகத்தின் ஓட்டத்தைத் தடை செய்த பீமன் இலக்கை நெருங்கி விட்டான். ஒரு கால் இலக்கு கோட்டைத் தாண்டிய நிலையில், புருஷாமிருகம் அவனைப் பிடித்துவிட்டது. ஒரு கால் இலக்கைத் தாண்டி விட்டதால் தான் வென்றதாக பீமனும், முழுமையாக இலக்கைத் தாண்டாததால் தானே வென்றதாக புருஷாமிருகமும் வாதிட்டனர். வழக்கு தர்மரிடம் சென்றது. அவர் பீமனின் ஒரு கால் இலக்கைத் தாண்டாததால் அவனது பாதி உடல் புருஷாமிருகத்திற்கு அடிமை என்று தீர்ப்பளித்தார். பாரபட்சமற்ற அவரது தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்து ராஜசூய யாகத்திற்கும் வர சம்மதித்தது என்று முடிகிறது கதை.

இந்த ஓட்டப் பந்தயக் கதையின் இன்னொரு வடிவமும் உள்ளது. 

குமரி மாவட்ட சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை "கோவிந்தா, கோபாலா" என்று முழக்கம் இட்டபடி ஓடி தரிசிப்பதுதான் சிவாலய ஓட்டம். அதற்கு காரணமாக கூறப்படும் கதைகளில் ஒன்று பீமன் புருஷாமிருகம் கதை. கண்ணன் அளித்து பீமன் கீழே போட்ட 12 ருத்திராட்சங்களில் இருந்து உருவான 12 சிவலிங்கங்களை கொண்டவையே இந்த 12 கோயில்கள் என்பது தல வரளறுகளுள் ஒன்று. அந்த 12 தலங்கள் திருமலை, திக்குறிச்சி, திப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதங்கோடு, திருபன்றிக்கோடு, திருநட்டாலம் என்பன ஆகும்.

பவானி சங்கமேஸ்வரர் கோயில்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் ராஜகணபதி சன்னிதி
வாயிலின் மேல் கஜலக்ஷ்மியின் இடத்தில்
புருஷாமிருகம், பீமன் ஓட்டப்பந்தய சிற்பம்



துணை:
  1. https://tamil.oneindia.com/astrology/news/sivalaya-ottam-2018-pilgrimage-on-maha-shivaratri-311157.html
  2. https://ta.wikipedia.org/wiki/சிவாலய_ஓட்டம்