ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று. அரிதாகவே காணப்படும் இந்த மூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையின் நான்கு தூண்களில் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் வடக்கு (1000 கால் மண்டபத்தை) நோக்கியுள்ளது.
![]() |
| சுரம் நீக்கும் பரமன் (ஜ்வரபக்ன மூர்த்தி): வளைகாப்பு மண்டபம் |
தூக்கிய இடது திருவடி, வீசிய முன் இடது கை, தழல் ஏந்திய இடது பின்கை இவற்றால் முதலில் நடராஜர் திருவடிவம் போலத் தோன்றினாலும் இந்த திருவடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் உடையது.
ஜ்வரபக்ன மூர்த்தியை வழிபட்டால் சுரம் தீரும் என்று நம்பப்படுகிறது. இந்தத் திருவடிவம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகப்பட்டினம் அருகிலுள்ள சாட்டியாங்குடி, ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேசுவரர் கோயில், திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே காணப்பெறுவது என்று திரு இரா. இராமகிருட்டினன் தனது 'அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திருவடிவத்தின் பின் உள்ள புராணக்கதை என்ன? மகாபாரத காலத்தில் வாழ்ந்தவன் ஆயிரம் கைகளுடைய வாணாசுரன். திருமாலின் ஐந்தாம் அவதாரமாகிய வாமனருக்கு மூன்று அடி மண் கொடுத்த மகாபலியின் மகன். சிறந்த சிவபக்தனான இவனது வேண்டுதலுக்கு சிவன் இணங்கி , பார்வதி, கணேசர், முருகரோடு அவன் அரண்மனையில் தங்கி இருந்தார். தன் மகள் உஷை கண்ணனின் மகன் அநிருத்தனை காதலிப்பது அறிந்த வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வந்த கண்ணன் முதலில் அங்கிருந்த சிவனுடன் போரிட வேண்டியதாயிற்று. கண்ணனுடன் களிப்போர் புரிந்த சிவன் பின்பு விலகி வழிவிட கண்ணன் வாணாசுரனின் 998 கைகளை வெட்டி வெற்றிகொண்டான். அநிருத்தன் உஷையை மணந்தான். சிவனருளால் வாணாசுரன் இழந்த கைகளைத் திரும்பப் பெற்றான். சிவனுக்கும் கண்ணனுக்கும் இடையேயானப் போரின்போது கண்ணன் சிவன்மீது குளிர் சுரத்தை ஏவினான். வெம்மை சுரத்தை ஏவி சிவன் அதை முறியடித்தான். அதுவே ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் திருவடிவம்.
துணைநூல்கள், சுட்டிகள்:
- அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' - இரா. இராமகிருட்டினன்; நர்மதா பதிப்பகம்; 2016
- தமிழ் விக்கிப்பீடியா - சுரம் நீக்கும் பரமன்
- தினமலர் கோயில்கள் - சிவவடிவங்கள் ஜ்வரபக்ன மூர்த்தி

ஜ்வரபக்ன மூர்த்தி
பதிலளிநீக்குஎனப்படும்
சுரம் நீக்கும் பரமன்
பற்றிய தகவல்கள்
புதியன.
மேலும் சிவனுடன்
கண்ணன் நடத்திய
போர் கதைகள்
இதுவரை
நான் எதிலும்
படிக்காதவை.
நாகப்பட்டினம் அருகே
சாட்டியக்குடி
என்ற ஊர் இருக்கிறது.
அது சாட்டியாங்குடி
இல்லை என்றே
நினைக்கிறேன்.
சிறப்பான தகவல்கள்
சிற்பங்களுடன் -
அழகான முயற்சி..!
சாட்டியக்குடி என்பதுதான் சரி.தகவலுக்கு நன்றி. திருத்துகிறேன்.
நீக்குThanks for the blog sir. Interesting data!
பதிலளிநீக்கு